திருமணிமாலை பாடல்

(தேவைப்படுவோர் நகல் எடுத்துக் கொள்ளுங்கள்)
 திருமணி மாலை
------------------------------
காப்பு
----------
கருமணி உண்டு சொற்காயாம்பு மேனி கருணை உண்டு
ஒருமணி  உண்டு என் உள்ளத்திலே உபதேசம் தந்த
குருமணி உண்டு இரவிகோடி சூரியப்பிரகாச குரவி உண்டு
திருமணி  உண்டு ஹரிஓம்  நமோ ராமானுஜாய என்ற தெய்வம் உண்டே

போற்றுதல்
--------------------
1. ஈரேழ் உலகம் பதினாலும்
எறும்பு முதலாய் எவ்வுயிர்க்கும்
பாரோர் பணியும் சிவன்மாலும்
படைக்கும் பிரம்ம தேவருக்கும்
ஆராய்ந்திருக்கும் தபோதனர்கள்
அஷ்டவசுக்கள் முனிவருக்கும்
சிராய் இரங்கி அருள் புரியும்
சிவமாய் உதித்த திருமணியே

2. பழிகள் கொலைகள் செய்தாலும்
பாவம் அனேகம் நினைத்தாலும்
விழிகண் குருடு கால் கைகள்
முடக்கம் இருந்தால் மனம் உருகி
அழியாது இருக்கும் எட்டெழுத்தை
அன்பாய் துதிக்க வினை தீர்த்து
தெளிவாய் மனதில் அருள் புரியும்
சிவமாய் உதித்த திருமணியே

3. குட்டம் குறை நோய் வாத பித்தம்
குன்மம் சயநோய் நீர் ஆம்பல்
வெட்ட கரப்பான் வெடிசூலை
மேக பாண்டு பீனிசமும்
மட்டில் அடங்கா நோய் தனக்கு
மருந்தாய் திருமணி அணிந்திடவே
திட்டமுடனே நோய் தீர்க்கும்
சிவமாய் உதித்த திருமணியே

4. ஏது துயரம் வந்தாலும்
எளியோர் வலியோர் ஆனாலும்
வாது சூது செய்தாலும்
வறுமை கொடுமை ஆனாலும்
போதும் எனவே எட்டெழுத்தை
போற்றி துதித்த போது உனக்கு
தீது வினைகள் தான் அகற்றும்
சிவமாய் உதித்த திருமணியே

5. கல்லும் உருவாய் ஆனதுவும்
ஹரியின் உயிரை காத்ததுவும்
புல்லும் பூடும் சீவனுக்கும்
பொசிப்பைக்கொடுத்தே ஆதரிக்கும்
வெல்லும்படிக்கு சிவயோகம்
விளக்கின் ஒளி போல் ஆகும் எங்கும்
செல்லும் படிக்கு அருள்புரியும்
சிவமாய் உதித்த திருமணியே

6. ஆல விசத்தை உண்ட
அடியார்க்கு அன்பாய் அருகிருக்கும்
மூலப்பொருளே எவ்வுயிர்க்கும்
முத்தாய் மொழிந்தே எழுந்து வரும்
பாலன் முதலாய் எவ்வுயிர்க்கும்
பாலோடு அன்னம் தான் தந்து
சீவனுடனே அருள் புரியும்
சிவமாய் உதித்த திருமணியே

7. அஞ்சும் மூன்றும் எட்டெழுத்து
ஹரி ஓம் என்ற உயிர் எழுத்து
துஞ்சாதிருக்கும் வடவம்பில்
தோன்றும் சங்கு சக்கரமும்
நெஞ்சில் அடக்கி எட்டெழுத்தை
நினைத்தோர் துன்பம் தீர்த்து வைக்கும்
செஞ்சொல் தமிழே தந்தருளும்
சிவமாய் உதித்த திருமணியே

8. கர்ம வினையை தான் துக்கும்
கசடர் நெஞ்சை ஊடறுக்கும்
தர்மம் என்றே நினைப்பவர்க்குத்
தானே நினைவு அறிந்திடவே
வர்ம மனதாய் அவர் பாதம்
வணங்கும் அடியார் மீதில் வரும்
சென்ம வினையை தான் துக்கும்
சிவமாய் உதித்த திருமணியே

9. பாடி படித்து இருந்தால் என்ன
பல நூல் சாஸ்திரம் அறிந்தால் என்ன
வாடி மெலிந்தால் ஆவது என்ன
மங்கையுடனே சேர்ந்தால் என்ன
ஆடி ஓடி அலைந்து என்ன
அன்பாய் மனதில் எட்டெழுத்தை
தேடி துதிக்க பலன் தருமே
சிவமாய் உதித்த திருமணியே

10. ஆசை ஒழிந்தது வினை தீர்ந்தது
ஆகாப்பெண் மேல் நினைவகற்றி
நேசம் மிகுந்த நெஞ்சகத்தில்
நினைவை இருத்தி ஓர் மனதாய்
வாசம் மிகுந்த எட்டெழுத்தை
மனதில் துதித்த பேர் தனக்கு
தேசம் மிகுந்த வாழ்வு தரும்
சிவமாய் உதித்த திருமணியே

11. அண்டம் முதலாய் தேவர்களும்
அவணிதனிலே மானிடர்கள்
உண்டே என்று இருந்தவர்க்கு
உதவி அருகில் குடியிருந்து
தொண்டன் எனவே துணை வருவாய்
துதிப்போர் நெஞ்சில் வினை அகற்றும்
தொண்டன் இடவே வாழ்வு தரும்
சிவமாய் உதித்த திருமணியே

12. வாட வேண்டாம் மனிதர்களே
மறக்க வேண்டாம் எட்டெழுத்தை
சூட வேண்டும் நெஞ்சகத்தில்
துதிக்க வேண்டும் இரவு பகல்
பாட வேண்டும் ராமா என்று
பணிய வேண்டும் சிவன் பாதம்
தேட வேண்டும் இராமன் ஒன்றை
சிவமாய் உதித்த திருமணியே

13. முக்தி கொடுக்கும் ஹரி எழுத்து
மூலமாகும் இவ்வெழுத்தே
பக்தி பிடித்தால் கூட நின்று
பாடி ஆடி நடனமிடும்
சக்தியுடனே திறம் கொடுக்கும்
தவமே செய்ய நினைவு தரும்
சித்தி முத்தி தந்தருளும்
சிவமாய் உதித்த திருமணியே

14. தங்க தகட்டில் எண் கோணம்
தயவாய் கீறி நடு வீட்டில்
மங்காது ஹரி ஓம் என்று எட்டெழுத்தை
வணங்கி துதிக்க வல்லீரால்
பொங்கும் பொருள் ஆம் ஓம் ஆம் சிங் எனவும்
பொறுமை அறியும் உம் எனவும்
திங்கள் ஒளி போல் தான் இருக்கும்
சிவமாய் உதித்த திருமணியே

15.  விரிவாய் கடலில் சயனமிடும்
மேக நிறமாய் இருக்கும் அது
ஹரி ஓம் எனவென்று உயிர் எழுத்து
அறியாது இருக்கும் மூலம் இது
பிரியாது இருந்த மணி விளக்கைப்
பிடித்த பேர்க்கு அருள் கொடுக்கும்
திருவாய் பூத்த வடிவு கொள்ளும்
சிவமாய் உதித்த திருமணியே

16. வீரிட்டு அபயம் செய்யாதே
மெய்யே ஐயும் கிலியும் என்று
நேரிட்டு ஹரி ஓம் நம என்று
நெருக்கி லட்சம் உரு ஏற்ற
நீரிட்டு அரணை காண்பிக்கும்
இலட்சுமியுடனே எழுந்தருளும்
சீரிட்டு அழகாய் வாக்கு அருளும்
சிவமாய் உதித்த திருமணியே

17. காட்டில் தனி வழி சென்றாலும்
கடுவாய் மிருகம் வந்து எதிர்த்தாலும்
நாட்டு நோய் வந்து அடுத்தாலும்
நமனார் தூதன் வந்தாலும்
சூட்டும் பொருளாய் எட்டெழுத்தை
துதிக்க மறவாது இருப்போர்க்கு
தீட்டும் வினையைதான் அறுக்கும்
சிவமாய் உதித்த திருமணியே

18. ஓங்காரத்தின் உட்பொருளாய்
ஓம் நமோ என்ற உயிர் எழுத்தாய்
ஆங்காரத்தில் அமர்ந்திருந்து
அழகாய் துன்பம் அணிந்திருக்கும்
நீங்காது இருந்த எட்டெழுத்தை
நேரே நடுவில் உள் இருத்தி
ஸ்ரீங்காரத்தில் வீற்றிருக்கும்
சிவமாய் உதித்த திருமணியே

19. அறிந்தபேர்க்கு சிவ மோட்சம்
அறியாதபேர்க்கு நரகம் இது
தெரிந்த நெறியோடு எட்டெழுத்தை
நினைப்போர் அருகில் குடியிருக்கும்
பிரிந்த பேர்க்கு துன்பம் வரும்
பிரியாபேர்க்கு வாழ்வு தரும்
தெரிந்து மோட்சம் தான் அருளும்
சிவமாய் உதித்த திருமணியே

20. உகத்துக்குகமே தான் பிறந்து
ஒடுங்காப்பேரை ஒடுக்கி வைக்கும்
விகத்துப்பகையை நீக்கி வைக்கும்
வேண்டும் வரங்கள் தான் அருளும்
தொகுத்த தமிழை ஆராய்ந்து
சொல்லும் நாவில் உள்ளிருக்கும்
செகத்தில் அதிக வாழ்வு தரும்
சிவமாய் உதித்த திருமணியே

21. மங்கை ரூபம் தான் இருக்கும்
மச்ச வடிவாய் அவதரிக்கும்
எங்கும் விளக்கின் ஒளி ஆகும்
எளியார் துயரம் தீர்த்து வைக்கும்
அங்கும் இங்கும் தான் இருக்கும்
அன்பர் இடமே வீற்றிருக்கும்
சிங்க ரூபமாயிருக்கும்
சிவமாய் உதித்த திருமணியே

22. மான் போல் வடிவுதானிருக்கும்
மச்ச வடிவாய் அவதரிக்கும்
கோன் போல் பச்சைப் பால் உண்ணும்
கொங்கை சுரக்க நஞ்சு வரும்
வான் போல் நிறையாய் இருந்துவிடும்
மன்னர்க்கு அரசாய் என்னை வைத்து
தேன் போல் அமிர்தம் தந்தருளும்
சிவமாய் உதித்த திருமணியே

23. ஆதி முதலாய் அரி எழுத்து
அருள்நூல் வேத சாஸ்திரங்கள்
நீதி பதினென் புராண முதல்
நிலை ஈரேழ் உலகு முதல்
பாதிப்பிறை சூடும் ஈசர்க்குப்
பதிவாய் முன்னே உதித்த பொருள்
தீது வினையை தீர்த்தருளும்
சிவமாய் உதித்த திருமணியே

24. மோக வலையை அகற்றி வைக்கும்
முனிவர் பாதம் எனக்கருளும்
சாகாதிருக்கும் எட்டெழுத்தை
தயவாய் துதிப்போர் அருகிருக்கும்
ஏக மனதாய் நின்று விடும்
மேக ரூபம் ஆன பொருள்
தேகம் மெலியாது அருள் புரியும்
சிவமாய் உதித்த திருமணியே

25. வானோர் ஒளியாய் நின்றவனே
மண் ஓர் அடியால் அளந்தவனே
ஏனோ என்னென்று அறியாமல்
எளியோரிடமே நீ வருவாயே
பூணோ வடவால் பள்ளி கொள்ளும்
பொருளே அருளே மனதிரங்கி
தேனே கனியே என் மனதில்
சிவமாய் உதித்த திருமணியே

26. அருவாய் உருவாய் ஆன பொருள்
அகாரம் உகாரம் நிறைந்த பொருள்
வருவாய் எனக்கு துணையாக
மணியாய் நின்று நடனமிடும்
தருவாய் எனக்கு சீர் பாதம்
தருணம் இதுவே சமயம் ஐயா
திருவாய் உருவாய் ஆனவனே
சிவமாய் உதித்த திருமணியே

27. வாசத்தோடே மூன்றெழுத்து
வருவாய் அரி ஓம் சக்தி மயம்
நேசத்தோடே அஞ்செழுத்து
நிலைக்கும் சிவாயநம என்னும்
வாசத்துடனே எட்டெழுத்தை
வணங்கி துதிக்க வல்லீரால்
தேசத்து அதிக வாழ்வு தரும்
சிவமாய் உதித்த திருமணியே

28. ஆறாத்துயரம் தீர்த்துவிடும்
அழகாய் துளபம் அணிந்திருக்கும்
மாறாச்செல்வம் அருள் புரியும்
வணங்காபேரை வணங்கவைக்கும்
வேறோர் வினையொன்று அணுகாமல்
மெய்யாய் எந்தன் அருகில் வந்து
தேறா மனதைத் தேற்றி வைக்கும்
சிவமாய் உதித்த திருமணியே

29. பாரில் பிறந்திருந்தாலும்
பல நூல் அறிந்து தெளிந்தாலும்
நீரில் உதித்த கமல மலர்
நெறியோடு எடுத்து செபித்தாலும்
வாரி துயிலும் எட்டெழுத்தை
வணங்கி துதித்த மானிடர்க்கு
சீரிட்டு அழகாய் வாக்கு அருளும்
சிவமாய் உதித்த திருமணியே
வணங்குதல்
----------------------
1. ஹரிஹரி தேவா நமஸ்காரம்
ஹரிகிருஷ்ண தேவா நமஸ்காரம்
நரசிம்ம மூர்த்தி நமஸ்காரம்
நாமா ரூபா நமஸ்காரம்
வரந்தருவோனே நமஸ்காரம்
வைகுண்ட வாசா நமஸ்காரம்
ஸ்ரீரங்கநாதா நமஸ்காரம்
சிவமாய் உதித்த திருமணியே

2. ராமா ராமா நமஸ்காரம்
நந்தன் புதல்வா நமஸ்காரம்
கருமுகில் வண்ணா நமஸ்காரம்
வாமா பூமா நமஸ்காரம்
வைகுண்ட ராமா நமஸ்காரம்
தேவே பூவே நமஸ்காரம்
சிவமாய் உதித்த திருமணியே

3. திருமணி என்றபெர்க்கு
செல்வம் பெருக உண்டாம்
திருமணி நாவில் வைத்தால்
தீவினை அணுகாது ஓடும்
திருமணி சிரசில் வைத்தால்
சிவ பக்தி கடாட்சம் உண்டாம்
திருமணி என்ற பேர்க்கு
செயமுடன் சுவர்க்கம் தானே.

அடியேன் தாசன்

 "அடியேன் தாசன்" பக்தர்கள் ஐந்து வீட்டு சுவாமிகளை வணங்கும்போதும், துதிக்கும்போதும், தங்கள் முழுச் சரணாகதியையும், நிபந்தனையற்ற அன்பையும் வெளிப்படுத்த இந்தச் சொல்லை பயன்படுத்துகிறார்கள். "நான் உனக்கு அடியவன்" உனது "திருப்பாதங்களுக்குத் தாசன்" என்ற பொருளில், தெய்வங்களின் மேல் தங்கள் ஈடுபாட்டையும், பற்று உறுதியையும் காட்டுகிறார்கள்.
கட்டளையை ஏற்று நடப்பவர்களாகவும் என்றும் இருப்பதாகவும் சொல்கிறார்கள். .


ஐந்து வீட்டு சுவாமி

பல சன்னதிகள் தோன்றினாலும் ''ஐந்து வீட்டு சாமி'' என்றுதான் இப்போதும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. இங்கு ''பெரியசாமி'' சங்கு, சக்கரம் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் போன்றவற்றைப் போக்கும் தலமாகவும், மாந்திரீக பிரச்னைகளுக்கும், மனநோயால் பாதிக்கப்பட்டோருக்கும் பரிகார தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. சுகபிரசவம் வேண்டுவோர் ''பெரியபிராட்டி'' அம்மனுக்கு வளையல்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்

ஆத்திசாமி யார்?

ஆத்திசாமி யார்?
ஆத்திசாமியை பூதம் என்கிறார்களே சரியா?
ஆதியிலே இருந்த கோயில் அதுதான் என்றும் சொல்கிறார்களே!!! பெரியசாமிகளும் இந்த கோவிலை தான் வணங்கினார் என்றும் சொல்கிறார்களே உண்மையா? அப்படியானால், பெரியசாமிகள் பூதத்தை வணங்கினாரா!!! ஆனால், பெரியசாமிகளை கொல்வதற்கு மந்திரவாதி ஏவிய பூதம்தான் ஆத்திசாமி என்கிறார்களே!!! ஒரே குழப்பமாக உள்ளது. என்று, நமது கோவில் வரலாறு பற்றி சிந்தித்து குழப்பமாக இருக்கிறதா? அப்படியானால் நாம் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அந்த
உண்மை என்னவென்றால் இந்து ஆன்மீக வரலாற்றில் சித்தர்களை அடக்கம் செய்த இடத்தில்தான் நாற்காலி வைத்திருப்பார்கள்.அதில் சித்தர் அமர்ந்து நமக்கு அருள் புரிவதாக கருதி வழிபடும் வழக்கம் உள்ளது. நமது கோவிலிலும் ஆத்திசாமி சன்னதியை நன்றாக கவனித்தீர்கள் என்றால் புரியும் ஆத்திசாமி நாற்காலியில் அமர்ந்து நமக்கு அருள் தருவதாக தான் வணங்கி வருகிறோம். பெரியசுவாமிகள் செட்டியாபத்துக்கு வரும் போது தற்போது உள்ள இடத்தில் இருந்த கோவிலும் ஆத்திசாமி(அப்போது வேறு பெயர் கூட இருந்திருக்கலாம்) கோவில்தான். அது அப்போதே சித்தர் கோவிலாக இருந்திருக்கும், அதனால்தான் பெரியசுவாமிகள் அதை வணங்கி வந்திருப்பார் ஆத்திசாமி பூதமாக அவரைக் கொல்வதற்கு வரும் போது அந்த இடத்தில் ஆத்திசாமியையும் நிலை நிறுத்தி இருப்பார். எனவே, அந்த இடத்தில் ஆத்திசாமிகளையும் அதற்கு முன்பு இருந்த சித்தரையும் ஒரு  சேரவே நாம் வணங்கி வருவதாக நான் கருதுகிறேன்.

வணங்கி மகிழ்வோம்

திருபுளி ஆழ்வார்போற்றி

1. அருள் தரும் திருப்புளி ஆழ்வாரே போற்றி!

2. ஐந்து வீட்டு சுவாமி கோவில் தெய்வமே போற்றி!

3.ஐம்பூதங்களையும் ஆளும் தலைவா போற்றி!

4.ஐம்பொறிக்குள் அமர்ந்தவனே போற்றி!

5.புளிமரத்தில் தோன்றியவனேபோற்றி!

6.பக்தர்களுக்கு  அருள்பவனே போற்றி!

7.வேண்டுவார் வேண்டுவன அளிப்பவனே போற்றி!

8.நோய்களைத் தீர்ப்பவனே போற்றி!

9.குறைகளை களைபவனே போற்றி!

10.ஆனந்தம் அளிப்பவனே போற்றி!

11.அமைதியின் உறைவிடமே போற்றி!

12.ஞானஒளி தருபவனே போற்றி!

13.அறவழிகாட்டியே போற்றி!

14.ஆதி மூலப்பொருளே போற்றி!

15. எங்கும் நிறைந்தவனே போற்றி!

16.கருணை கடலே போற்றி!

17.பக்தர்களின் பாதுகாவலனே போற்றி!

18.எங்கள் குலதெய்வமே போற்றி!!! போற்றி!!!
           ஆத்தியப்பன் S