திருப்பள்ளி எழுச்சி

காலை மலர்ந்தது, கதிரவன் வந்தான்,
பெரியசாமியே எழுந்தருள்வீரே!

செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி,
சிங்கார ரூபரே, எழுந்தருள்வீரே!


பக்தர்கள் யாவரும் கூடியே வந்தோம்,
பள்ளி கொண்ட பரம்பொருளே!
மங்கள இசை எத்திக்கும் முழங்க,
மகிழ்வுடன் எழுந்தருள்வீரே!


வெள்ளிப் பணித்துளிகள் புல்லினில் மின்ன,
விழி மூடிய நித்திரையை கலைப்பீரே!
பறவையின் கீதங்கள் பதிகமாய் ஒலிக்க,
பரந்தாமனே, எழுந்தருள்வீரே!


தாமரை மலர்கள் செம்மையாய் மலர,
தரிசனம் தர எழுந்தருள்வீரே!
எங்களின் துயர்கள் தீர்க்க வேண்டி,
அருளுடன் எழுந்தருள்வீரே!



ஊரெலாம் உந்தன் புகழ் பாடியே நிற்க,
உள்ளம் கவர்ந்த உத்தமரே!அலங்காரம் பூண்டு,
அழகாய் எழுந்தருள்வீரே!


உறவுகள் நெஞ்சில் உறைந்திருப்பவரே,
திருமணி முகுந்தா எழுந்தருள்வீரே!
செல்வங்கள் யாவும் செழிக்க அருள்வீரே,
ஜெகத்குருவே எழுந்தருள்வீரே!


ஹரி ஓம் ராமானுஜாய! போற்றி! போற்றி!
பெரியசாமியே போற்றி! போற்றி!
மங்களம் உண்டாகுக! மங்களம் உண்டாகுக!

எல்லோரும் இன்புற்று வாழ அருள்வீரே! அருள்வீரே!
 ஆத்தியப்பன் S

ஒரு கல் கருப்பட்டியானது

அது ஒரு காலம். நான் பள்ளிப்பருவத்தின் இனிமையான தொடக்கத்தில், ஒரு குட்டிப் பையனாக இருந்தபோது நடந்த நிகழ்வு. 

எங்கள் குடும்பத்துடன், நமது
குலதெய்வக் கோயிலுக்குச் சென்றிருந்தோம்.  
அன்று இரவு உணவு நேரம். கோயிலின் சர்க்கரை பொங்கல் பிரசாதம், அதன் தித்திப்பு வாசனையுடன் எங்களை வரவேற்றது. அனைவரும் வட்டமாக அமர்ந்து சாப்பிடத் தொடங்கினோம்.

 அங்கேதான் சண்டை ஆரம்பித்தது. எனக்கும் என்  தங்கச்சிக்கும் எதற்காகவோ வாக்குவாதம் வெடித்தது. சத்தம் அதிகமாகவே, என் அப்பா கோபம் கொண்டு என்னை அடித்துவிட்டார்.
சிறு வயதின் இயல்பான பிடிவாதம் என்னுள் சற்று அதிகமாகவே இருந்தது. அடி வாங்கிய கோபத்தில், சர்க்கரை பொங்கலின் சுவையை மறந்து, சட்டென்று எழுந்து அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டேன்.

 பின்னால், "அப்பா, சாப்பிடுப்பா", "கோபம் வேண்டாம், வா சாப்பிடலாம்" என்று பல குரல்கள் என்னை அழைக்கத் தொடங்கின.

 ஆனால், என் கோபம் கொஞ்சமும் தணியவில்லை. சாப்பிட மறுத்து, அடம் பிடித்தேன்.
என் அண்ணன், என் பிடிவாதத்தைப் போக்க எண்ணி, என்னை தூக்கிக்கொண்டு சாப்பிட வைக்க முயன்றார். 

ஆனால், நான் அவருடைய பிடிக்கு சிக்காமல், கோயிலின் விசாலமான முற்றத்தில் ஓடத் தொடங்கினேன். "பிடிங்கடா அவனை!", "சாப்பிடாம எப்படி?" என்று பல குரல்கள் என்னை விரட்டின. ஒரு அளவுக்கு மேல் என்னால் ஓட முடியவில்லை. மூச்சு இரைக்க நின்றேன்.
அப்பொழுது, என் கண் எதிரே ஒரு கல் கிடந்தது. கோபத்தின் உச்சிக்குச் சென்றுவிட்ட நான், அதை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, "யாராவது பக்கத்துல வந்தீங்கன்னா, இந்தக் கல்லை கொண்டு மண்டையை உடைத்து விடுவேன்!" என்று மிரட்டினேன். என் மிரட்டலைக் கேட்டதும் எல்லோரும் சற்று திகைத்துப் போனார்கள். "நீ சாப்பிடுறதுன்னா சாப்பிடு, இல்லாட்டி பட்டினியா கிட" என்று சொல்லிவிட்டு, என் பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கத் தொடங்கிவிட்டனர்.

கையில் கல்லைப் பிடித்தபடியே, சாப்பிடாமல் நின்றுகொண்டிருந்தேன். நேரம் செல்லச் செல்ல, கடுமையான பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. என்ன செய்வதென்று புரியாமல், கண்களில் நீர் தாரை தாரையாக வழிய, சத்தம் வராமல் அழத் தொடங்கினேன். கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, தனிமையில் நின்றேன். கோயில் வளாகத்தில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

சிறிது நேரம் கழிந்திருக்கும். என் கையில் இருந்த கல் சற்று பிசுபிசுவென்று இருப்பதை உணர்ந்தேன். "என்னடா கல் பிசுபிசுப்பா இருக்கு?" என்று ஆச்சரியத்துடன் பார்த்தேன். அது ஒரு கல்லல்ல! என் கையில் இருந்தது, தித்திப்பான பனங்கருப்பட்டி! மனசுக்குள் ஒரு மின்னல் வெட்டியது. கண்கள் அகல விரிந்தன. அந்தக் கடுமையான பசியில், அந்த இனிப்பு என் நாவுக்கு எவ்வளவு அமுதம் போல இருந்தது! பயங்கர சந்தோஷப்பட்டேன்.
அப்போது அந்தச் சிறுவயதில் எனக்கு ஆத்தியப்ப சுவாமி மட்டும்தான் தெரியும், என் மனதுக்கு மிகவும் பிடித்தமானவரும் அவர்தான். இந்தக் கல்லை ஆத்தியப்ப சுவாமிதான் கருப்பட்டியாக மாற்றி எனக்குக் கொடுத்ததாக நினைத்து மகிழ்ந்தேன்.

 அதுவரை என்னை ஆக்கிரமித்திருந்த பசியும் கோபமும் ஒரு நொடியில் மறைந்து, ஒரு வித தெய்விக உணர்வு என் மனதை ஆட்கொண்டது. உடனே, அதை கடித்துத் தின்றேன். தின்றது போக சிறிது அளவு என் கையில் மீதம் இருந்தது. அதை அப்படியே கையில் வைத்துக்கொண்டு, இனிப்பின் திருப்தியிலும், ஆத்தியப்ப சுவாமியின் கருணையிலும் நானும் படுத்து உறங்கிவிட்டேன்.

மறுநாள் காலை. நான் இரவு சாப்பிடாமல் இருந்ததால், என் அம்மா வழக்கத்தைவிட சற்று சீக்கிரமே எழுந்து என்னைத் தேடி வந்தார்கள். என்னை எழுப்பி சாப்பிட வைப்பதற்காக, எழுப்பியபோது, என் கையில் இருந்த மீதி கருப்பட்டியைக் கண்டார்கள். "இது என்ன? உனக்கு எங்கிருந்து கருப்பட்டி கிடைத்தது?" என்று கேட்டார்கள். நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினேன். 

என் பெற்றோர், அண்ணன், தங்கை என அனைவருக்கும் ஒரே ஆச்சரியம்!
அன்று ஆத்தியப்ப சுவாமி அளித்த அந்தக் கருப்பட்டி, வெறும் இனிப்பு மட்டுமல்ல, சிறுவயது பிடிவாதத்தைக் குறைத்து, தெய்வ பக்தியையும், இனிமையான ஒரு நினைவையும் என் மனதில் ஆழமாக விதைத்தது. இன்றும் அந்தக் கதையை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம், அந்தப் பனங்கருப்பட்டியின் சுவையும், ஆத்தியப்ப சுவாமியின் அன்பும் என் நெஞ்சில் இனிமையாகத் தஙகியுள்ளது.
ஆத்தியப்பன் S