ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும் பெரியசுவாமி, அருள்தரும் வயணபெருமாள், அருள்தரும் அனந்தம்மாள், அருள்தரும் ஆத்திசுவாமி, அருள்தரும் திருபுளி ஆழ்வார், அருள்தரும் பெரியபிராட்டி
ஐந்து வீட்டு சுவாமிகள்
அன்னதானம்
ஐந்து வீட்டு சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் பணிவிடை என்று அன்போடு அழைக்கும் அன்னதானம் தினமும் தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது. சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களும் இங்கு கூடி, அரிசி உணவை முக்கிய பிரசாதமாக உண்டு பசியாறுகின்றனர்.
ஒரு காலத்தில் கோயில்களில் ஏழைகளின் பசியைப் போக்க கஞ்சித் தொட்டிகள் இருந்தன. அதே கருணை மனப்பான்மையோடு, ஐந்து வீட்டு சுவாமி திருக்கோயிலும் பசிப்பிணி நீக்கும் புண்ணிய ஸ்தலமாகத் திகழ்கிறது. இங்கு அளிக்கப்படும் அன்னதானம் பசியை மட்டும் போக்குவதில்லை, மக்களின் இதர துன்பங்களையும் நீக்குகிறது என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இந்த இனிய நிகழ்வு இத்திருக்கோயிலின் பெருமைகளுள் ஒன்றாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
முக்கிய திருவிழாக்கள்
சித்திரைப் பூஜை மற்றும் தைப்பூசத் திருவிழாக்கள்
அருள்மிகு பெரிய சுவாமி, பெரியபிராட்டி, ஆத்திசுவாமி, திருபுளி ஆழ்வார் கோயில்கள் ஸ்தாபிதம் செய்த நாளைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 18-ஆம் தேதி தொடங்கி 6 நாட்கள் சித்திரைப் பூஜை திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அதைப் போலவே வயணப் பெருமாள், அனந்தம்மாள் கோவில்கள் ஸ்தாபிதம் செய்த நாளைப் போற்றும் வகையில் தை மாதம் 5-ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரைத் திருவிழாவின் இறுதி நாள் வழங்கப்படும் அன்னமுத்திரைப் பிரசாதம் மிகவும் மகிமையுள்ளதாகக் கருதப்படுகிறது.
இத்திருக்கோயிலில் பூஜைகளும், வழிபாடுகளும் மௌனமாகக் நடைபெறுகின்றன. பூஜையின்போது மேளம், நாதஸ்வரம் போன்ற எந்த இசைக்கருவியும் இசைப்பதில்லை. திருவிழாக்களின்போது சுவாமி புறப்பாடு நடைபெறுவதும் இல்லை. இங்கு சக்தி வழிபாடு தொன்றுதொட்டு நடைபெற்று வருவதால் பெண்களுக்கு சிறப்புரிமை வழங்கப்படுகிறது. பூஜைக்குரிய சாமான்கள் பெண்களால் தொண்டு வணங்கிய பிறகே சுவாமிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. தைப்பூசை மற்றும் சித்திரைப் பூசை திருவிழாக்களின்போது ஏராளமான மக்கள் வந்து சுவாமியின் அருள் பெற்றுச் செல்கின்றனர்.
திருப்பள்ளி எழுச்சி
காலை மலர்ந்தது, கதிரவன் வந்தான்,
பெரியசாமியே எழுந்தருள்வீரே!
செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி,
சிங்கார ரூபரே, எழுந்தருள்வீரே!
பக்தர்கள் யாவரும் கூடியே வந்தோம்,
பள்ளி கொண்ட பரம்பொருளே!
மங்கள இசை எத்திக்கும் முழங்க,
மகிழ்வுடன் எழுந்தருள்வீரே!
வெள்ளிப் பணித்துளிகள் புல்லினில் மின்ன,
விழி மூடிய நித்திரையை கலைப்பீரே!
பறவையின் கீதங்கள் பதிகமாய் ஒலிக்க,
பரந்தாமனே, எழுந்தருள்வீரே!
தாமரை மலர்கள் செம்மையாய் மலர,
தரிசனம் தர எழுந்தருள்வீரே!
எங்களின் துயர்கள் தீர்க்க வேண்டி,
அருளுடன் எழுந்தருள்வீரே!
ஊரெலாம் உந்தன் புகழ் பாடியே நிற்க,
உள்ளம் கவர்ந்த உத்தமரே!அலங்காரம் பூண்டு,
அழகாய் எழுந்தருள்வீரே!
உறவுகள் நெஞ்சில் உறைந்திருப்பவரே,
திருமணி முகுந்தா எழுந்தருள்வீரே!
செல்வங்கள் யாவும் செழிக்க அருள்வீரே,
ஜெகத்குருவே எழுந்தருள்வீரே!
ஹரி ஓம் ராமானுஜாய! போற்றி! போற்றி!
பெரியசாமியே போற்றி! போற்றி!
மங்களம் உண்டாகுக! மங்களம் உண்டாகுக!
எல்லோரும் இன்புற்று வாழ அருள்வீரே! அருள்வீரே!
ஆத்தியப்பன் S
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)