சர்க்கரை பொங்கல் பிரசாதம்

     கோவிலில் சர்க்கரை பொங்கல் வைப்பதற்கு நாம் கோவிலில் பணம் கட்டிவிட்டால், அவர்களே பூஜைக்குரிய பொருட்கள், பொங்கல் வைப்பதற்கான பொருட்கள் அனைத்தையும் வாங்கி பொங்கல் செய்து,  நாம் விரும்புகிற பூஜை நேரத்தின் போது நம்மை பூஜையில் கலந்து கொள்ள செய்து  தேங்காய், பழம், பூ என அனைத்தையும் அனைத்து கருவறைகளிலும் சாமிக்கு படைத்து, அதன் பின் ஓலை கூடையில்  நமக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதமும் சாமிக்கு அணிவித்த மாலைகளும் தேங்காய் பழம் அனைத்தும் ஒரு பையில் பிரசாதமாக நம் மனம்மகிழ வழங்குகிறார்கள்...

தீராத நோய் தீர்க்கும் ஐந்து வீட்டு சுவாமி




திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், உடன்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது செட்டியாபத்து என்ற ஊர். இங்கு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில் 4 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழிலுற அமைய பெற்றுள்ளது. கிழக்குபுறம் ஒரு வாசலும், மேற்குபுறம் ஒரு வாசலும், வடக்கு புறம் ஒரு வாசலுமாக மூன்று வாசல்களைக் கொண்டிருக்கிறது இந்த ஆலயம்.

வடக்கு புற வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் முதலில் பெரியசாமி சன்னிதியும், அடுத்து வயனப்பெருமாள் மற்றும் அனந்தம்மாள் வீற்றிருக்கும் சன்னிதியும் காணப்படுகிறது. அடுத்ததாக ஆத்தி சுவாமி சன்னிதியும், தொடர்ந்து திருப்புளி ஆழ்வார் சன்னிதியும், அதன் அருகில் பெரியபிராட்டி சன்னிதியும் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரே கோட்டை சுவருக்குள் 6 தெய்வங்களும், 5 சன்னிதிகளும் அமைந்து உள்ளதால், இந்த ஆலயமானது ‘ஐந்து வீட்டு சுவாமிகள் திருக் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. பெரிய சுவாமி சன்னிதியின் எதிர்புறம் ஆஞ்சநேயர் சன்னிதியும், ஆத்தி சுவாமி அருகே குதிரை சுவாமி சன்னிதியும் அமைந்துள்ளன.

பெரியசாமி சன்னிதி தவிர மற்ற சன்னிதிகளில் மூல வருக்கு விக்கிரகங்கள் கிடையாது. பெரியசாமிக்கு மட்டுமே மூலவர் விக்கிரகம் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம். ஜாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் மூலஸ்தானம் வரை சென்று வணங்கும் சிறப்பு, இந்தக் கோவிலுக்கு மட்டுமே உள்ளது என்று சொல்லப்படுகிறது.

ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் தினசரி 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 7 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடைபெறுகின்றன. மேலும் மாலை நேரத்தில், ‘மாலை சாத்துதல்' பூஜையும் செய்யப்படுகிறது. இடைப்பட்ட நேரங்களில் பணிவிடை (படையல் போடுபவர்கள்) செய்கிறவர்களுக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது. இதுதவிர தினசரி அதிகாலை 4 மணிக்கு சங்கநாதமும், சேகண்டி ஓசையும் முழங்கப் படுகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் தங்களால் முடிந்த பணிவிடைகளை (ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை பலியிட்டு), படையல் போடுவார்கள். முன்னதாக ஐந்து வீட்டு சுவாமிகளுக்கு இந்த படையல்கள் போடப்படும். அதன்பிறகு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், விரதம் இருந்து தரிசனம் செய்பவர்களுக்கு தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். குழந்தைப்பேறு மற்றும் சுகப்பிரசவம் வேண்டுவோர், பெரியபிராட்டி அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்தினால் வேண்டியது நிறைவேறும். மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆத்தி சுவாமியை வழிபட்டு ஆத்தி மர இலையை அரைத்து நீரில் கலந்து குடித்து வந்தால் அவர்கள் குணம் பெறுவார்கள்.

கால் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள், ஆத்தி சுவாமி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செருப்பு மற்றும் கதாயுதம் காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் செருப்புகளை அணிந்ததின் அடையாளமாக, கோவிலில் உள்ள செருப்புகளில் ஆத்தி சுவாமியின் கால் விரல்கள் பதிந்த தடங்களை இன்றும் காணலாம். பெரியசாமி சன்னிதியில் கட்டில், தலையணை வைக்கப்பட்டு இருக்கும். இதில் இரவு நேரத்தில் பெரியசாமி படுத்து ஓய்வு எடுப்பதாக நம்பப்படுகிறது. காலையில் நாம் இதனை பார்த்தால் இந்த படுக்கை விரிப்புகள் கலைந்து இருப்பதை காணலாம்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோவிலில் சித்திரை திருவிழாவும், தைத்திருவிழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படு கிறது. இதேபோல் அமாவாசை, பவுர்ணமி, திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன. சித்திரை திருவிழாவின் இறுதி நாள் அன்று ஆலயத்தில் வழங்கப்படும் அன்னமுத்திரி என்ற பிரசாதம் மிகவும் மகிமை பெற்றதாக கருதப்படுகிறது.

திருமணிக்கட்டி மகிமைகள்

ஐந்து வீட்டு சுவாமி பக்தர்கள் நெற்றியில் திருமணி என்னும் வெள்ளைப்பொட்டு இட்டுக்கொள்வார்கள். இந்த திருமணி என்பது நாமக்கட்டி போன்று வெள்ளை நிறத்தில் தோற்றமளிக்கும் திருமண்ணாகும். இதை தண்ணீரில் குழைத்து பொட்டு இட்டுக்கொள்வர். இந்த கோவிலில் பிரசாதமாக திருமணிக்கட்டியே வழங்கப்படுகிறது. கோவிலில் முடி காணிக்கை செலுத்தியவர்கள் கூட, தலையில் சந்தனத்திற்கு பதிலாக திருமணிக்கட்டியை குழைத்து தான் பூசிக்கொள்கின்றனர். தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இந்த திருமணியை தண்ணீரில் குழைத்து சாப்பிடுவார்கள். இதன் மூலம் நோய் குணமாகுவதாக பக்தர்கள் இன்றளவும் நம்பி வருகிறார்கள்.

இந்த கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு திருமணி என்று பெயர் சூட்டியிருப்பதில் இருந்தே திருமணிக்கட்டி பிரசாதத்தின் மகிமையை நாம் உணர முடியும்.

பூஜை கால அட்டவணை

காலசந்தி நடைதிறப்பு- காலை 7 மணி.

பூஜை ஆரம்பம் - காலை 8 மணி.

உச்சி காலை நடைதிறப்பு- பகல் 11 மணி.

பூஜை ஆரம்பம்- பகல் 12 மணி.

இராக்காலம் நடைதிறப்பு- மாலை 5.30 மணி.

பூஜை ஆரம்பம்- இரவு 7 மணி.

திருபுளி ஆழ்வார் அவதரித்த இடம்

 
ஆழ்வார் திருநகரியில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாக்கபட்டு வணங்கிவரும்  தூங்கா புளியமரம். இதனடியில் அயோத்தி லட்சுமனன் அவதாரமாகிய ஆழ்வார் அவதரித்தார். அதனால் அவர் திருபுளி ஆழ்வார் என அழைக்கப்படுகிறார்.



கோவிலில் என் அனுபவம்

        நான் குட்டி பையனா இருக்கும் போது ஒரு முறை கோவிலுக்கு போயிருந்தோம், அப்போ கோவிலில் இரவு சாப்பிட உக்காரும் போது எனக்கும் என் தங்கச்சிக்கும் சண்டை வந்துருச்சி.. அப்போ எங்க அய்யா என்னை அடித்துவிட்டார்கள், உடனே நான் கோவித்துக் கொண்டு சாப்பிடாமல் சென்று விட்டேன் பிறகு எல்லோரும் என்னை தாஜா செய்து சாப்பிட கூப்பிட்டார்கள் ''அப்போ'' எனக்கு பிடிவாதம் சற்று கூடுதல் எனவே நான் சாப்பிட வராமலே இருந்தேன், அப்போ எங்க அண்ணன் என்னை தூக்கி கொண்டு போய் சாப்பிட வைக்க முயற்ச்சி செய்தார் நான் அவருடைய பிடிக்கு சிக்காமால் ஓடிக்கொண்டு இருந்தேன், அப்போ எல்லோரும் என்னை பிடித்து சாப்பிட வைக்க விரட்டினார்கள் எனக்கு ஒரு அளவுக்கு மேல் ஓட முடியவில்லை, உடனே நான் அங்கு கிடந்த ஒரு கல்லை எடுத்து யாராவது பக்கத்துல வந்தீங்கங்ன்னா கல்லை கொண்டு மண்டையை உடைத்து விடுவேன்னு மிரட்டினேன். பிறகு எல்லோரும் நீ சாப்பி்டுறுதுன்னா சாப்பிடு, இல்லாட்டி பட்டினியா கிடன்னு சொல்லிவிட்டு படுத்து விட்டார்கள், நான் அந்த கல்லை கையில் வைத்தபடியே நின்று கொண்டே இருந்தேன், சிறிது நேரத்தில் எனக்கு கடுமையா பசிக்க ஆரம்பித்து விட்டது, என்ன செய்வதுன்னு ஒன்னும் தெரியலை, நான் அப்படியே சத்தம் வராமல் அழ ஆரம்பித்து விட்டேன், கண்ணீரை துடைத்துக்கொண்டே அழுது கொண்டு இருந்தேன், எல்லோரும் தூங்கி விட்டார்கள். கொஞ்ச நேரம் போயிருக்கும் என் கையில் இருந்த கல் சற்று பிசுபிசுன்னு இருந்தது. என்னடா கல் பிசுபிசுப்பா இருக்கேன்னு பாத்தா அது பனங்கருப்பட்டியா இருந்துச்சு, மனசுல எனக்கு பயங்கர ச்ந்தோசமாகிப்போச்சு. உடனே அதை தின்று விட்டு சிறிதளவு கையில் மீதம் வைத்து கொண்டு நானும் தூங்கி விட்டேன், எங்க அம்மா இரவு நான் சாப்பிடவில்லை என்பதால் சற்று சீக்கிரமே எழுந்து என்னை சாப்பிட வைப்பதற்காக என்னை தேடி எழுப்பினார்கள், எழுப்பிவிட்டு கையில் மீதி இருந்த கருப்பட்டியை பார்த்துவிட்டு ஏது உனக்கு கருப்பட்டின்னு கேட்டார்கள், நான் நடந்ததை கூறினேன், எல்லோருக்கும் மிகவும் ஆச்சரியமாகி போச்சு... உங்களுக்கு...!!!                      S ஆத்தியப்பன்