ஆத்தியப்பரின் அதிசயம்

ஒரு அதிசயம்!ஆத்தியப்பர் வைத்தியராக மாறிய தருணம்: 

(அன்று 26/05/25) இரவு 10 மணி. வெளியே கொட்டும் மழை. ரயில் கிளம்ப இன்னும் சிறிது நேரமே இருந்தது. பதற்றத்துடன் ஒரு ஆட்டோவை நிறுத்தி, "ரயில் நிலையத்திற்கு சீக்கிரம் போக வேண்டும்! அவசரம்!" என்று கூறினேன்.
 ஆட்டோகாரர் ஒரு நொடி கூட தாமதிக்காமல், வேகமாக வாகனத்தைச் செலுத்தத் தொடங்கினார். சற்று இருண்ட சாலைகளில் ஆட்டோ பாய்ந்து சென்றது. திடீரென, மழைநீர் நிரம்பிய ஒரு பள்ளம்! அதை கவனிக்காத ஓட்டுனர், வேகத்தைக் குறைக்காமல் அதனுள் ஆட்டோவை செலுத்த, "சட்டென்று" ஆட்டோ உயரத் தூக்கி போட்டது. அடுத்த நொடி, நான் இருக்கையிலிருந்து ஓரடிக்கும் மேல் தூக்கி எறியப்பட்டு, "நச்" என்று அதே இடத்தில் வந்து விழுந்தேன். அவ்வளவுதான்! என் இடுப்பில் ஒரு சுருக்கென்ற வலி! என்னை அறியாமலேயே, "அம்மா!" என்ற அலறல் என் வாயிலிருந்து வெளிவந்தது. 

அந்த வலியுடனே என் ரயில் பயணத்தைத் தொடர்ந்தேன். இரவு முழுவதும் வலியாக இருந்தது. சிறுநீர் கழிக்க ரயில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கக் கூட முடியவில்லை. ஒவ்வொரு அசைவும் வலியைக் கூட்டியது. எப்படியோ பயணத்தை முடித்து ஊர் திரும்பினேன்.

 இரண்டு நாட்கள் கழித்து, மருத்துவரைச் சந்தித்தேன். அவர் "ஓம்னி ஜெல்" என்ற மருந்தை பரிந்துரைத்தார். அதைப் பயன்படுத்தியும் வலி தீரவில்லை. 

சில நாட்கள் கழித்து, எலும்பு முறிவு சரிசெய்யும் வைத்தியரிடம் சென்றேன். அவர், எனக்கு நரம்பு பிடித்துக்கொண்டதாகக் கூறி சிகிச்சை அளித்தார். ஆனாலும் வலி குறைந்தபாடில்லை.

 மேல்நாட்டு கழிவறையைப் பயன்படுத்தும் போது கூட வலியால் துடித்துப் போனேன்.

பின்பு 16/06/25 அன்று இரவு. நமது குலதெய்வக் கோவிலுக்குச் செல்ல வேண்டி ஒரு பேருந்துப் பயணம். பேருந்தின் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது கூட சிரமமாக இருந்தது. என் முதுகில் சுமந்து செல்லும் பையைத் தூக்க கூட முடியவில்லை. போகும் வழியெல்லாம் வேகத்தடைகள் வரும்போது என் இடுப்பில் ஒரு மின்சாரம் பாய்ந்தது போல் வலித்தது. ஒவ்வொரு வேகத்தடையும் என் பொறுமையைச் சோதித்தது. ஆனாலும், வலியைப் பொறுத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தேன்.

17/06/25 அன்று காலை, மதியம் இருவேளை பூஜைகளிலும் கலந்துகொண்டேன். பிறகு திருச்செந்தூர் சென்றேன். உடன்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியெல்லாம் வேகத்தடைகள் என்னை வாட்டி எடுத்தன. திருச்செந்தூரில் இரவு தங்கிவிட்டு,

 மறுநாள் 18/06/25 காலையில் திரும்பவும் நமது கோவிலுக்கு வந்தேன். வரும் வழியிலும் வேகத்தடைகள் என்னை வேதனைப் படுத்தியது. எப்படியோ கோவிலை அடைந்தேன்.

 காலை நடைதிறந்தவுடன் அனைத்து சன்னதிகளிலும் நமது தெய்வங்களை வணங்கினேன். ஆத்திசாமி சன்னதிக்கு வந்தபோது, ஒரு உள்ளுணர்வு என்னை உந்தியது. அங்கே காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்த காலணிகளை எடுத்து, என் வலி இருந்த இடத்தில் வைத்து, "ஆத்திசாமியே, என் வலி தீர வேண்டும்!" என்று கண்ணீருடன் வேண்டிக்கொண்டேன். பிறகு பூஜையிலும் கலந்துகொண்டேன்.

ஆத்திசாமி சன்னதியில் அண்ணாவியிடம், என் முகத்தில் தீர்த்தம் அடியுங்கள்" என்று கேட்டேன். அண்ணாவியும் ஆத்திசாமி பூஜை முடிந்ததும் தீர்த்தத்தை எடுத்து என் முகத்தில் மூன்று முறை எறிந்தார். அப்போதே என் உடலில் ஒரு சிலிர்ப்பு! விவரிக்க முடியாத ஒரு தெய்வீக உணர்வு! பிறகு அனைத்து சன்னதிகளிலும் பூஜைகள் முடிந்த பிறகு, சர்க்கரைப் பொங்கல் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, நான் தங்கியிருந்த அறையில் வந்து உறங்கினேன்.
மதிய பூஜைக்கு எழுந்தபோது, ஒரு அதிசயம்! என் வலி சற்று குறைந்திருப்பதை உணர்ந்தேன். இது வெறும் தற்செயல் நிகழ்வா, அல்லது ஆத்திசாமியின் அருளா? மதிய பூஜையில் கலந்துகொண்டு, மாலை சுமார் நான்கு மணி அளவில் ஊர் திரும்பத் தயாரானேன். என் முதுகில் சுமக்கும் பையைத் தூக்கி மாட்டினேன்... ஆச்சரியம்! எனக்கு எந்தவிதமான வலியும் தெரியவில்லை! இது எப்படி சாத்தியம்? அங்கிருந்து சுமார் 6 மணி நேரம் பேருந்துப் பயணத்தில் ஊர் வந்து சேர்ந்தேன். பேருந்தில் வரும்போது வேகத்தடைகள் வந்தன. ஆனால், எனக்கு எந்தவிதமான வலியையும் வேதனையையும் தரவில்லை! ஆனால், 
குனிந்து நிமிரும் போது மட்டும் வலி இருந்த இடத்தில் லேசான வலி போல் கூச்சம் இருந்தது.

நான் இன்று (21/06/25) இந்தப் பதிவை எழுதும் நேரம், எனக்கு எந்தவிதமான வலியும் இல்லை! வலியில்லாமல் குனிந்து நிமிர முடிகிறது. கழிவறையைப் பயன்படுத்த முடிகிறது. என்ன ஒரு ஆச்சரியம்! ஆத்தியப்பசாமி எனது வேண்டுகோளை ஏற்று உடனே சரி செய்து இருக்கிறார்! இந்தப் பதிவை எழுதும் போதே என் உடம்பில் ஒரு புல்லரிப்பு! நமது குலதெய்வத்தின் மகத்துவம் என்னை மிகவும் புளகாங்கிதம் அடையச் செய்துள்ளது. ஆத்தியப்பர், என் வலியைக் குணமாக்கி, என்னிடம் அதிசயம் செய்திருக்கிறார்!
"ஹரி ஓம் ராமானுஜய"
"அடியேன் தாசன்" ஆத்தியப்பன் S

பெரியசாமி சன்னதி கல் மண்டப திருப்பணி

17.6.25 மற்றும் 18.6.25 தேதிகளில் நடைபெறும் பெரியசாமி சன்னதியின் நுழைவு வாசல் கல் மண்டபத்திற்கு அடித்தளம் அமைக்கும் வேலை 

பெரியசாமியே போற்றி

1.ஐந்து வீட்டு தெய்வமே போற்றி!!!
2.பெரியசாமி தெய்வமே போற்றி!!!
3.அருள்புரிபவரே போற்றி!!! 
4.பிணிதீர்ப்பவரே போற்றி!!! 
5.ஆபத்பாந்தவரே போற்றி!!!
6. அருள் தருபவரே போற்றி!!!
7.ஐயம் தீர்ப்பவரே போற்றி!!!
8.இன்னல் தீர்ப்பவரே போற்றி!!!
9.இடர்களை நீக்குபவரே போற்றி!!!
9.இன்பம் தருபவரே போற்றி!
10.எளியார்க்கு எளியவரே போற்றி!!!
11.நல்வழி காட்டுபவரே போற்றி!!!
12.நலன்கள் சேர்ப்பவரே போற்றி!
13.பயம் போக்குபவரே போற்றி!!!
14.பகை அழிப்பவரே போற்றி!
15.செல்வம் பெருக்குபவரே போற்றி!!!
16.சிறப்பு அருள்பவரே போற்றி!!!
17.ஓங்கார நாதரே போற்றி!
18. ஐந்து வீட்டு சித்தரே போற்றி!!! போற்றி!!!
                                          ஆத்தியப்பன் S

காத்தருளும் சோலையப்பா!!!

எப்போதும் வென்றான் சோலையப்ப சுவாமியே!!!
அழகு தாளாத திருமேனி
அருள் பொங்கும் பொன்னழகே!!!
மனதில் நிறைந்த சோலையப்பா!!!
எங்களை மகிழ்வுடன் காத்திடும் இறைவா!!!
எப்போதும் வென்றான் நீயே!!!
எவர்க்கும் அருளும் நாயகனே,
அடியவர் துயரம் தீர்ப்பவனே,
அன்பே உருவான தெய்வமே!!!
நின் திருவடி போற்றிப் பணிகின்றோம்
திருப்புகழ் பாடித் துதிக்கின்றோம்
எண்ணங்கள் ஈடேறவே
என்றும் துணை நீயே!!!
      ஆத்தியப்பன் S

காக்கும் தெய்வமே


எங்களை காக்கும் வயண பெருமாளே,
வேண்டினால் அருள்வாய் வேந்தனே!
துயரங்கள் தீர்ப்பாய் தூயவனே,
நம்பினோர் வாழ்வை நலமாக்குவாய்!

எங்களை காக்கும் வயண பெருமாளே,
மனதில் நின்றாய் மாலவனே!
உந்தன் நாமமே உயிர்மூச்சன்றோ,
திருவருள் பொழிவாய் தெய்வமே!

எங்களை காக்கும் வயண பெருமாளே,
உலகைக் காக்கும் உத்தமனே!
உன் பாதமே சரணமென்று,
பக்தர்களைக் காப்பாய் பரந்தாமா! 
           ஆத்தியப்பன் S

ஐந்து வீட்டு சுவாமி கோவில் தசப்பதிகம்

        ~~காப்பு~~

பொன்மலர்ச் சேவடி போற்றித் துதிப்போம்
வன்மலி பாவங்கள் மாற்றி அருள்வாய்
அமல ஞானம் நிலவப் புரிவாய்
இம்மலர்த் தசகம் இனிதுடன் பாடவே.
 
       ~~தசப்பதிகம்~~

1.பெரியசாமி என்றொரு நாமம், உலகின் முதல் தெய்வம் நீ!
உறவான எங்கள் குலத்தின் காவலனே, ஓயாமல் அருள்வாய் நீயே!

2.வயண பெருமாள் எங்கள் தெய்வமே, இருண்ட வாழ்வின் ஒளி நீ!
இருவினைகள் தீர்க்கும் இறையே, இனிக்கும் வாழ்வருள்வாய் நீயே!

3.அனந்தம்மாள் தேவியே தாயே, மூவுலகின் துணையுமாய்!
முழுமையாய் வந்தனை செய்தோம், முக்தி அருள்வாய் நீயே!

4.ஆத்திசாமி ஆண்டவனே, நாற்கோண நாயகா நீ!
நற்பதங்கள் வழங்கிடுவாய், நலமெல்லாம் அருள்வாய் நீயே!

5. திருபுளி ஆழ்வார் ஐயா, ஐம்புலனும் அடக்கியவன்!
ஐயம் நீக்கி அடியேனுக்கு, ஆனந்தம் அருள்வாய் நீயே!

6.பெரியபிராட்டி தாயே, ஆறெழுச்சி வடிவம் நீ!
ஆதரிக்கும் அன்புத் தாயே, அள்ளி அருள்வாய் நீயே!

7.ஏழு ஜென்மம் தொடர்ந்தாலும், எங்கள் ஏழு ஏழு தலைமுறைக்கும்!
ஏகாந்த சக்தியாய் இருந்து, என்றும் காத்திடுவாய் நீயே!

8.எட்டுதிக்கும் புகழ் பரவ, எங்கள் ஐந்து வீட்டு சுவாமிகளே!
ஏற்றங்கள் தந்து எமை காக்க, எப்போதும் துணை இருப்பீர் நீரே!

9.ஒன்பது கோள்களும் போற்றும், உன்னத தெய்வங்களே!
ஒளியாய் வாழ்வு சிறக்க, ஒளியாய் வருவீர் நீரே!

10.பற்றற்ற நிலையறிந்தோம், பக்தி மனம் கொண்டோம்!
பாதுகாக்கும் தெய்வங்களே, பரமபதம் அளிப்பீரே!!! 
           ஆத்தியப்பன் S

ஐந்து வீட்டு சுவாமிகளே போற்றி


 1.அருள் தரும் பெரியசாமியே போற்றி!!!
 2. அருள் தரும் வயணப்பெருமாளே போற்றி!!!
 3. அருள் தரும் அனந்தம்மாளே போற்றி!!!
 4. அருள் தரும் ஆத்தியப்ப சுவாமியே போற்றி!!!
 5. அருள் தரும் திருபுளி ஆழ்வாரே போற்றி!!!
 6. அருள் தரும் பெரியபிராட்டியே போற்றி!!!
 7. எங்கள் குலம் காக்கும் குரு பெரியசாமியே போற்றி!!!
8.கருணைமிகு வயணப்பெருமாளே போற்றி!!!
 9. ஆனந்தம் தரும் அனந்தம்மாளே போற்றி!!!
 10. நீதி வழங்கும் ஆத்தியப்ப சாமியே போற்றி!!!
11.நற்கதி அருளும் திருபுளி ஆழ்வாரே போற்றி!!!
 12.மங்களம் அருளும் பெரியபிராட்டியே போற்றி!!!
 13.ஐந்து வீட்டு சுவாமிகளே போற்றி!!!
 14.குறை தீர்க்கும் தெய்வங்களே போற்றி!!!
15.துன்பம் துடைக்கும் தெய்வங்களே போற்றி!!!
16. உலகை காக்கும் தெய்வங்களே போற்றி!!!
17.செட்டியாபத்து தேசத்துக் காவலர்களே போற்றி!!!
18.பக்தர் துயர் தீர்க்கும் பரம்பொருளே போற்றி!!! போற்றி!!!
              ஆத்தியப்பன் S