ஒரு கல் கருப்பட்டியானது

அது ஒரு காலம். நான் பள்ளிப்பருவத்தின் இனிமையான தொடக்கத்தில், ஒரு குட்டிப் பையனாக இருந்தபோது நடந்த நிகழ்வு. 

எங்கள் குடும்பத்துடன், நமது
குலதெய்வக் கோயிலுக்குச் சென்றிருந்தோம்.  
அன்று இரவு உணவு நேரம். கோயிலின் சர்க்கரை பொங்கல் பிரசாதம், அதன் தித்திப்பு வாசனையுடன் எங்களை வரவேற்றது. அனைவரும் வட்டமாக அமர்ந்து சாப்பிடத் தொடங்கினோம்.

 அங்கேதான் சண்டை ஆரம்பித்தது. எனக்கும் என்  தங்கச்சிக்கும் எதற்காகவோ வாக்குவாதம் வெடித்தது. சத்தம் அதிகமாகவே, என் அப்பா கோபம் கொண்டு என்னை அடித்துவிட்டார்.
சிறு வயதின் இயல்பான பிடிவாதம் என்னுள் சற்று அதிகமாகவே இருந்தது. அடி வாங்கிய கோபத்தில், சர்க்கரை பொங்கலின் சுவையை மறந்து, சட்டென்று எழுந்து அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டேன்.

 பின்னால், "அப்பா, சாப்பிடுப்பா", "கோபம் வேண்டாம், வா சாப்பிடலாம்" என்று பல குரல்கள் என்னை அழைக்கத் தொடங்கின.

 ஆனால், என் கோபம் கொஞ்சமும் தணியவில்லை. சாப்பிட மறுத்து, அடம் பிடித்தேன்.
என் அண்ணன், என் பிடிவாதத்தைப் போக்க எண்ணி, என்னை தூக்கிக்கொண்டு சாப்பிட வைக்க முயன்றார். 

ஆனால், நான் அவருடைய பிடிக்கு சிக்காமல், கோயிலின் விசாலமான முற்றத்தில் ஓடத் தொடங்கினேன். "பிடிங்கடா அவனை!", "சாப்பிடாம எப்படி?" என்று பல குரல்கள் என்னை விரட்டின. ஒரு அளவுக்கு மேல் என்னால் ஓட முடியவில்லை. மூச்சு இரைக்க நின்றேன்.
அப்பொழுது, என் கண் எதிரே ஒரு கல் கிடந்தது. கோபத்தின் உச்சிக்குச் சென்றுவிட்ட நான், அதை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, "யாராவது பக்கத்துல வந்தீங்கன்னா, இந்தக் கல்லை கொண்டு மண்டையை உடைத்து விடுவேன்!" என்று மிரட்டினேன். என் மிரட்டலைக் கேட்டதும் எல்லோரும் சற்று திகைத்துப் போனார்கள். "நீ சாப்பிடுறதுன்னா சாப்பிடு, இல்லாட்டி பட்டினியா கிட" என்று சொல்லிவிட்டு, என் பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கத் தொடங்கிவிட்டனர்.

கையில் கல்லைப் பிடித்தபடியே, சாப்பிடாமல் நின்றுகொண்டிருந்தேன். நேரம் செல்லச் செல்ல, கடுமையான பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. என்ன செய்வதென்று புரியாமல், கண்களில் நீர் தாரை தாரையாக வழிய, சத்தம் வராமல் அழத் தொடங்கினேன். கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, தனிமையில் நின்றேன். கோயில் வளாகத்தில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

சிறிது நேரம் கழிந்திருக்கும். என் கையில் இருந்த கல் சற்று பிசுபிசுவென்று இருப்பதை உணர்ந்தேன். "என்னடா கல் பிசுபிசுப்பா இருக்கு?" என்று ஆச்சரியத்துடன் பார்த்தேன். அது ஒரு கல்லல்ல! என் கையில் இருந்தது, தித்திப்பான பனங்கருப்பட்டி! மனசுக்குள் ஒரு மின்னல் வெட்டியது. கண்கள் அகல விரிந்தன. அந்தக் கடுமையான பசியில், அந்த இனிப்பு என் நாவுக்கு எவ்வளவு அமுதம் போல இருந்தது! பயங்கர சந்தோஷப்பட்டேன்.
அப்போது அந்தச் சிறுவயதில் எனக்கு ஆத்தியப்ப சுவாமி மட்டும்தான் தெரியும், என் மனதுக்கு மிகவும் பிடித்தமானவரும் அவர்தான். இந்தக் கல்லை ஆத்தியப்ப சுவாமிதான் கருப்பட்டியாக மாற்றி எனக்குக் கொடுத்ததாக நினைத்து மகிழ்ந்தேன்.

 அதுவரை என்னை ஆக்கிரமித்திருந்த பசியும் கோபமும் ஒரு நொடியில் மறைந்து, ஒரு வித தெய்விக உணர்வு என் மனதை ஆட்கொண்டது. உடனே, அதை கடித்துத் தின்றேன். தின்றது போக சிறிது அளவு என் கையில் மீதம் இருந்தது. அதை அப்படியே கையில் வைத்துக்கொண்டு, இனிப்பின் திருப்தியிலும், ஆத்தியப்ப சுவாமியின் கருணையிலும் நானும் படுத்து உறங்கிவிட்டேன்.

மறுநாள் காலை. நான் இரவு சாப்பிடாமல் இருந்ததால், என் அம்மா வழக்கத்தைவிட சற்று சீக்கிரமே எழுந்து என்னைத் தேடி வந்தார்கள். என்னை எழுப்பி சாப்பிட வைப்பதற்காக, எழுப்பியபோது, என் கையில் இருந்த மீதி கருப்பட்டியைக் கண்டார்கள். "இது என்ன? உனக்கு எங்கிருந்து கருப்பட்டி கிடைத்தது?" என்று கேட்டார்கள். நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினேன். 

என் பெற்றோர், அண்ணன், தங்கை என அனைவருக்கும் ஒரே ஆச்சரியம்!
அன்று ஆத்தியப்ப சுவாமி அளித்த அந்தக் கருப்பட்டி, வெறும் இனிப்பு மட்டுமல்ல, சிறுவயது பிடிவாதத்தைக் குறைத்து, தெய்வ பக்தியையும், இனிமையான ஒரு நினைவையும் என் மனதில் ஆழமாக விதைத்தது. இன்றும் அந்தக் கதையை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம், அந்தப் பனங்கருப்பட்டியின் சுவையும், ஆத்தியப்ப சுவாமியின் அன்பும் என் நெஞ்சில் இனிமையாகத் தஙகியுள்ளது.
ஆத்தியப்பன் S

பெரியபிராட்டி

திருபுளி ஆழ்வார்


ஆத்திசாமி

அனந்தம்மாள்

வயணப்பெருமாள்

பெரியசாமி

பூஜை பெட்டி

கேள்வி: 
நமது கோவில் வழிபாட்டு முறையில் பூஜை பெட்டி வைத்து வணங்கும் பழக்கம் உள்ளதா?

 பதில்:
நமது கோவில் வழக்கத்தில் இல்லை.  பெட்டியில் சாமி வைத்து வணங்கும் பழக்கம் எப்படி வந்தது தெரியுமா?
 அந்தக் காலத்தில் வசதி படைத்த மன்னர்கள் கோவில் கட்டி கொண்டார்கள். அரண்மனைக்குள்ளும் கோவில் வைத்துக் கொள்வார்கள்.

 ஊர்க்காரர்கள், பணக்காரர்கள் சேர்ந்து ஊருக்கு பொதுவான இடத்தில் கோவில் கட்டுவார்கள். இந்த கோவில்கள் பிடிமன் கோவிலாகவோ அல்லது சிலை வைத்து வணங்கும் கோவிலாக இருக்கும்,

 போக்குவரத்து குறைவான காலத்தில் வசதி குறைவானவர்கள் குலதெய்வ கோவில்களுக்கு எப்பவாவது ஒரு முறை சென்று வருபவர்கள் கோவிலில் உள்ள சாமியின் மீது அணிவிக்கப்பட்ட ஆடை அல்லது அங்கு வைத்து பூஜை செய்யப்பட்ட பொருள் ஒன்று கொண்டு வந்து ஒரு பெட்டிக்குள் பத்திரமாக வைத்து அவர்களது தெய்வத்தை வணங்கி வருவார்கள்.
 பெட்டிகள் வைத்து வணங்குவதற்கு மற்றொரு காரணமும் இருந்தது, அவர்கள் வணங்கி வரும் பொருட்கள் அதாவது சாமியின் அடையாளங்கள் பாதுகாப்பாகவும் இருக்கும், மேலும் தீட்டு படாமலும் இருக்கும்,

 அந்த காலத்தில் பலரும் சிறிய வீடுகளில் இருந்ததால்,  அவர்களின் இந்த  நம்பிக்கையின் அடிப்படையில் பெண்கள் மாதவிடாய் காலம் போன்ற நேரங்களிலும், இறந்தவர்கள் வீட்டு சென்று வந்த போதும் தீட்டுப்படும் என்ற நம்பிக்கையும் இருந்ததால் அந்த தெய்வங்களுக்கு தனி பூஜை அறை வசதி வீடுகளில் இல்லாததால் பெட்டிகள் வைத்து தனிமைப்படுத்தி வைத்தார்கள்,  இப்படியாகத்தான் பூஜை பெட்டி வைத்து வணங்கும் பழக்கம் பல நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது.  ஆனால் தற்போது புதிதாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பழங்காலத்தில் இருந்து தொன்று தொட்டு செய்து கொண்டிருந்தால் தொடர்ந்து செய்யலாம் தவறு ஏதும் இல்லை.

வலியில்லா வாழ்வு

வலியில்லா வாழ்வு வேண்டும்,

துன்பங்கள் தீர்ந்து, இன்பங்கள் பெருகிட வேண்டும்.

கண்ணீரும் கவலையும் விலகிட வேண்டும்,

மகிழ்ச்சி மட்டுமே என் துணையாய் வர வேண்டும்.

ஒவ்வொரு நாளும் நிறைவாய் அமைய வேண்டும்.

அமைதியான மனமும், ஆரோக்கியமான உடலும் மகிழ்ச்சியான வாழ்வும் தந்தருள்வாய் நீயே.

உன் கருணையால் உலகம் செழிக்கட்டும்,
என்றும் உன் பாதத்தில் சரணடைகிறேன் ஆத்தியப்பன் S

குண்டலினி

 பொருள்:   
"கீழிருந்து மேல் நோக்கி கிளம்பும் நாகம் கண்டீரோ?" 

 குண்டலினி சக்தி மூலாதாரத்தில் இருந்து மேல் எழுப்பப்படுவதைக் குறிக்கிறது.

 "காலமதில் மூச்சடக்கி கபாலம் நோக்கினீரோ!" 

 பிராணாயாமத்தின் முக்கியத்துவத்தையும், சகஸ்ராரத்தை நோக்கிய பயணத்தையும் குறிக்கிறது.
   
"ஞாலமதில் ஞானம் கண்டு நாமும் வாழ கண்டீரோ?" 

 குண்டலினி சக்தி விழித்தெழும் போது கிடைக்கும் ஞானம் மற்றும் அதன் மூலம் ஏற்படும் வாழ்வியல் மாற்றத்தைக் குறிக்கிறது.

"வாலையவள் கூத்தாட மாளாத இன்பம் கண்டீரோ?" 

வாலை என்பது குண்டலினி சக்தியின் மற்றொரு பெயர். அது விழித்தெழும் போது ஏற்படும் ஆனந்த அனுபவத்தைக் குறிக்கிறது.

  "உருவமதில் உறைந்திருக்கும் உயிர்வாயு அறிந்தீரோ?"
 
பிராண சக்தியைப் பற்றிய புரிதல்.

  "கருவமதில் கலந்திருக்கும் கர்மவினை களைந்தீரோ?" 

 குண்டலினி யோகம் கர்ம வினைகளைக் கரைக்கும் சக்தியைக் குறிக்கிறது.
 
"திருவமதில் சேர்த்திடும் சிவசக்தி உணர்ந்தீரோ?" 

குண்டலினி சக்தியானது சிவசக்தியுடன் இணையும் அனுபவத்தைக் குறிக்கிறது.

 "குரு பெரியசாமி மொழியில் தெளிந்தீரோ குண்டலினி ரகசியம்?" 

 குருவின் துணையுடன் குண்டலினி ரகசியத்தைப் புரிந்துகொள்வதைக் குறிக்கிறது.

குலதெய்வம் தெரியவில்லையா...


தங்களுக்கு குலதெய்வம் எது என்று தெரியவில்லையா கலக்கம் வேண்டாம்.

ஐந்து வீட்டு சுவாமிகளை குலதெய்வமாக ஏற்றுக் கொள்வது மிகவும் சிறப்பான ஒன்று.

தமிழ்நாட்டில் பல குடும்பங்களுக்கும், பல ஜாதியினர்களுக்கும் இதுவே பாரம்பரிய குலதெய்வமாக இருக்கிறது.

ஐந்து வீட்டு சுவாமிகள் கோயில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடிக்கு அருகில் உள்ள செட்டியாபத்து என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஒரு பிரசித்தி பெற்ற கோயில்.

இந்தக் கோயிலில் ஒரே வளாகத்தினுள் ஆறு முக்கிய தெய்வங்களும், ஐந்து சன்னிதிகளும் அமைந்துள்ளன. இந்த ஐந்து சன்னிதிகள் அமைந்துள்ளதால் "ஐந்து வீட்டு சுவாமிகள்" என்று அழைக்கப்படுகிறது.

 இங்கு வீற்றிருக்கும் முக்கிய தெய்வங்கள்:
பெரியசாமி( சங்கு சக்கரம் ஏந்திய நாராயணன்),
பெரியபிராட்டி அம்மன் (மீனாட்சி அம்மன் வடிவம் என்றும் கருதப்படுகிறது),
வயனப்பெருமாள், மற்றும் அனந்தம்மாள்,
ஆத்தி சுவாமி,
திருபுளி ஆழ்வார்,
ஆஞ்சநேயர் (பெரியசாமி சன்னிதிக்கு எதிரே இருக்கிறார்)

இந்தக் கோயிலின் ஒரு சிறப்பு என்னவென்றால், ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரும் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியைத் தொட்டு தரிசனம் செய்யலாம்.

ஏன் ஐந்து வீட்டு சுவாமிகளை குலதெய்வமாக ஏற்க வேண்டும்?

பழமையான மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த கோயில். இது பல நூற்றாண்டுகள் பழமையான கோயில். இங்கு வழிபடுவோருக்கு பலவிதமான நன்மைகள் நிகழ்கிறது.

 குழந்தைப்பேறு, நோய்கள் தீருதல், மன அமைதி போன்ற பல பிரார்த்தனைகள் இங்கு நிறைவேறுகின்றன. 
பல குடும்பங்களுக்கு இது பரம்பரை குலதெய்வமாகவே இருந்து வருகிறது.

 உங்கள் குடும்பத்தில் குலதெய்வம் எது என்று தெரியாத நிலையில், உங்கள் முன்னோர்கள் வாழ்ந்த பகுதியை ஆராயும்போது, இந்தக் கோயிலின் தொடர்பு இருந்தால், இது உங்கள் குலதெய்வமாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
 
குலதெய்வம் தெரியாதவர்கள், பரவலாக வணங்கப்படும் சக்தி வாய்ந்த தெய்வங்களை தங்கள் குலதெய்வமாக ஏற்று வழிபடுவது உண்டு. அந்த வகையில் பார்த்தால் ஐந்து வீட்டு சுவாமிகள் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ஆண்டுகள் தோறும் சித்திரை மாதம், தை மாதம் திருவிழா நடைபெற்று வருகிறது, மேலும் அமாவாசை பௌர்ணமி தினங்களிலும், ஒவ்வொரு தமிழ் மாசம் கடைசி வெள்ளியன்று அதாவது மாதாந்திர வெள்ளியன்று  சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. தினசரி மூன்று வேளை பூஜையும், மதியம் அன்னதானமும் நடைபெற்று வருகிறது.

 இங்கு வழங்கப்படும் "அன்னமுத்திரி" பிரசாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை பலியிட்டு படையல் இடுவது வழக்கம்.

எவ்வாறு குலதெய்வமாக ஏற்றுக்கொள்வது?

குலதெய்வம் யார் என்று உங்களுக்குத் தெரியாத நிலையில், ஐந்து வீட்டு சுவாமிகளை உங்கள் குலதெய்வமாக ஏற்க விரும்பினால், நீங்கள் முழு மனதுடன் இந்த தெய்வத்தை உங்கள் குடும்பத்தின் காவல் தெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடத் தொடங்கலாம்.

முடிந்தால், செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமிகள் கோயிலுக்கு நேரில் சென்று தரிசனம் செய்யலாம். அங்கு உங்கள் கோரிக்கையை வைத்து, "இன்று முதல் எங்கள் குடும்பத்தின் குலதெய்வம் ஐந்து வீட்டு சுவாமிகளே" என்று மனமுருகி வேண்டலாம்.

 நேரில் செல்ல இயலாவிட்டால், வீட்டில் ஐந்து வீட்டு சுவாமிகளின் படத்தை ஒரு இடத்தில் வைத்து ஐந்து வீட்டு சுவாமிகளை மனதில் நினைத்து வழிபடத் தொடங்கலாம்.

மனமுருகிப் பிரார்த்திக்கலாம்.
குலதெய்வ வழிபாடு என்பது ஒருவரின் குடும்ப அமைதி, சுபிட்சம் மற்றும் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது என்று நம்பப்படுகிறது.

 ஐந்து வீட்டு சுவாமிகளை உங்கள் குலதெய்வமாக ஏற்பது உங்கள் குடும்பத்திற்கும், குலத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். "ஹரி ஓம் ராமானுஜாய" "அடியேன் தாசன்"
 அன்புடன் ஆத்தியப்பன் S

ஆத்திகோயில்: மந்திரவாதியும் மகான் பெரியசுவாமிகளும்!


முன்னொரு காலத்தில், இன்றைய ஆத்திகோயில் எனும் புண்ணிய ஸ்தலம், ஆதிகோயில் எனப் பழைய பெயருடன் சிறப்புற்று விளங்கியது. கேரள தேசத்திலிருந்து வந்த ஒரு மந்திரவாதி, தினமும் ஆகாய மார்க்கமாக வந்து, அக்கோயிலில் பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவனது அமானுஷ்ய சக்தியால், மற்ற எவரும் அறியாத வண்ணம் அவன் மாத்திரமே கோயிலுக்குள் பிரவேசித்துப் பூஜித்து வந்தான்.

ஒருநாள், தவவலிமை மிக்க பெரியசுவாமிகள் அக்கோயிலுக்கு விஜயம் செய்தார். பூட்டப்பட்டிருந்த கோயில் கதவுகளின் மேல் தனது திருக்கரத்தை வைத்ததும், கதவுகள் மந்திரம்போல் தானாகவே திறந்து கொண்டன. உள்ளே சென்ற சுவாமிகள், அமைதியாய் பூஜைகள் செய்து முடித்துவிட்டுத் திரும்பினார். அவர் வெளியேறியதும், கதவுகள் மீண்டும் தாமாகவே தாளிட்டுக் கொண்டன.

வழக்கம் போல பூஜை செய்ய வந்த மந்திரவாதி, கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். சுவாமிக்கு முன்பே பூஜைகள் நடந்திருப்பதைக் கண்டதும் அவன் குழப்பமடைந்தான். "பூட்டிய கதவுகள் அப்படியே இருக்க, யார் உள்ளே வந்திருக்க முடியும்?" என வியந்து, கோயில் அருகில் தங்கியிருந்த பெரியசுவாமிகளிடம் சென்று, "இங்கு பூஜை செய்தது யார்?" எனக் கேட்டான். அதற்கு சுவாமிகள், தான் தான் என்பதை அமைதியாய் ஒப்புக்கொண்டார். மந்திரவாதிக்குக் கோபம் மேலிட, "இனிமேல் இந்த மாதிரி பூஜை செய்யக்கூடாது!" என மிரட்டிவிட்டுச் சென்றான்.
மறுநாள் பூஜை செய்ய வந்த மந்திரவாதி, முதல் நாள் போலவே கோயிலில் பூஜை நடந்திருப்பதைக் கண்டதும் கோபம் உச்சிக்கு ஏறியது. மீண்டும் சுவாமிகளிடம் சென்று, "நேற்றே நீ பூஜை செய்யக்கூடாது என்று கூறினேன். அப்படியிருந்தும் ஏன் பூஜை செய்தாய்?" எனக் கேட்டான். அதற்கு சுவாமிகள், "கோயில் திறந்து இருந்தது. நான் பூஜை செய்தேன். நீர் கோயிலை நன்றாகப் பூட்டிச் செல்லும்!" என அமைதியாகக் கூறினார்.

சுவாமிகளின் பதிலைக் கேட்டு மந்திரவாதி சற்று திகைத்தான். கோயிலுக்குச் சென்று கதவுகளை நன்றாகச் சாத்தி, வலுவாகப் பூட்டி சரிபார்த்துவிட்டுச் சென்றான். மறுநாள் அவன் வந்தபோது, கோயில் மீண்டும் திறந்திருப்பதையும், பூஜை நடந்திருப்பதையும் கண்டு கடும் கோபம் கொண்டான். சுவாமிகளிடம் சென்று, "நீ இந்த இடத்தை விட்டுச் சென்றுவிடு! இல்லாவிட்டால் நீ கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும்!" என்று வாக்குவாதம் செய்தான். அதற்கு சுவாமிகள், "நான் பூஜை செய்த முறைகள் தவறா? அல்லது திறந்திருந்த கோயிலில் பூஜை செய்தது தவறா? இதில் எதுவும் தவறில்லை. எனவே, எனக்கு எந்தத் தீங்கும் நேராது!" என்றார்.

இதைக் கேட்ட மந்திரவாதி கோபமுற்று, சுவாமிகளைப் பழிவாங்க வேண்டுமெனத் தீர்மானித்தான். தனது குருவிடம் நடந்ததைக் கூறி, சுவாமிகள் மீது ஏவல் பூஜை செய்து அவரைக் கொல்லுமாறு பூதம் ஒன்றைப் பணித்தான்.
சுவாமிகள் தன்னை கொல்ல வந்த பூதத்தைப் பார்த்து, "சாந்தி!" என சொல்லவும், அந்தப் பூதம் சுவாமிகளின் காலடியில் அமைதியாக மண்டியிட்டு அமர்ந்தது. சென்ற பூதம் திரும்பி வராததால், மந்திரவாதி மேலும் ஒரு கொடுமையான பூதத்தைப் பழிவாங்க அனுப்பி வைத்தான். அந்தப் பூதமும் சுவாமிகள் "சாந்தி!" எனச் சொல்ல அமைதியாகிவிட்டது.

அனுப்பிய பூதங்கள் செயலற்றுப் போனதால், மந்திரவாதி மிகுந்த கோபம் கொண்டு, யாராலும் வெல்ல முடியாத "ருத்ரபூதத்தை" அனுப்பி வைத்தான். ருத்ரபூதம் சுவாமிகளைக் கொல்ல, விண்ணுக்கும் மண்ணுக்கும் தீப்பிழம்பாய் கொடூரமாகச் சென்று சுவாமிகளை நெருங்கியது. சுவாமிகள் "சாந்தி!" என்றார். ஆனாலும், பூதம் அடங்கவில்லை; மேலும் தீவிரமாகியது. அதைக் கண்ட சுவாமிகள் பதறினார். உடனே, அன்னை மீனாட்சியம்மையை (பெரிய பிராட்டி) நினைத்து வணங்கினார்.

உடனே அவ்விடம் வந்த அன்னை, மிகவும் பலம் வாய்ந்த அந்தப் பூதத்தைப் பார்த்து "ஆற்றி இரு!" (அதாவது "ஆத்தி இரு" அல்லது ஆறுதலாக இரு) எனக் கட்டளையிட்டாள். பூதம் சற்று அமைதியானது. பூதத்தைப் பார்த்து அன்னை, "நீ வந்த காரணமென்ன?" என்று வினவினார். அதற்கு ருத்ரபூதம், அருகில் இருந்த சுவாமிகளைக் காட்டி, "இவரைக் கொன்று வர எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது!" எனக் கூறி, "இவர் தங்களின் பக்தன் என எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் நான் வந்திருக்கவே மாட்டேன்!" எனக் கூறி மன்னிப்புக் கோரியது.

அன்னை கருணையுடன் பூதத்தை மன்னித்து, "நீ இங்கேயே கோயிலில் 'ஆத்தி இரு'. உனக்கு இரு வகை படையல் உண்டு!" என அருளினாள். ருத்ரபூதமும் அன்னையை வணங்கி அப்படியே ஏற்றுக்கொண்டு, "தான் இப்பொழுது எழும்பியதால் எப்படியும் நரபலி கொள்ளவேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" எனக் கேட்க, அன்னை "உன்னை அனுப்பியவனையே பலி கொள்ளுமாறு" சொன்னாள். ருத்ரபூதம் தன்னை அனுப்பிய மந்திரவாதியை நரபலி கொண்டு அமைதியாகியது. பின்னர், அன்னையிடம் கொடுத்த வாக்கின்படி இங்கு வந்து அமர்ந்தது.

அன்னையின் வாக்குப்படி, ஆத்திகோயிலில் மற்ற பணிவிடைகளோடு "மச்ச பணிவிடையும்" "கீரிச்சுட்டான்" பணிவிடையும் சேர்த்து இன்றளவும் கொடுக்கப்பட்டு வருகிறது. இத்தலம் அன்னை மீனாட்சியின் கருணையையும், பெரியசுவாமிகளின் தவவலிமையையும் போற்றும் புனிதத் தலமாக இன்றும் விளங்கி வருகிறது.

நன்றி சொல்ல

ஐந்து வீட்டு சுவாமி திருக்கோயில் பக்தர்களே நமது ஸ்தல வரலாற்றில் உள்ள
"அம்மாசி தானான அரூபத்தாயே" பாடலை இயற்றிய தவத்திரு குமராண்டி ஞானியார் சுவாமிகள் பற்றிய வெகுகாலமாக எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை ஆனால் தற்பொழுது சில தகவல்கள் கிடைத்துள்ளன:

  இவர் நாஞ்சில் நாட்டில் உள்ள குலசேகரபுரம் (கன்னியாகுமரி மாவட்டம்) என்ற கிராமத்தில், மருந்துவாழ்மலை அடிவாரத்தில் பிறந்தவர் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.

  1852 ஆம் ஆண்டு ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர் என்றும், 1908 ஆம் ஆண்டு வைகாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைந்தார் என்றும் ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது.

  "உசரவினை" என்ற இடத்தைப் பற்றிய தகவல் ஒரு பொதுவான பட்டியலில் இருந்து வந்தது; "குலசேகரபுரம்" என்பது மிகவும் குறிப்பிட்ட தகவல்.

ஆரம்ப வாழ்க்கை
  இவர் தனது சகோதரி பிச்சையின் வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும், தினசரி மாடு கன்றுகளை மேய்ச்சலுக்காக மருந்து வாழ்மலைக்கு ஓட்டிச் செல்வது வழக்கமென்றும் கூறப்படுகிறது.

  ஒரு நாள், மலையில் இருந்த ஒரு சித்தர் ஒருவருக்கு தாகம் எடுக்க, குமராண்டி தண்ணீர் இல்லாததால் ஒரு பசுவிலிருந்து பாலைக் கறந்து கொடுத்துள்ளார்.
  இதில் மனம் மகிழ்ந்த சித்தர், குமராண்டியின் நாவில் ஏதோ எழுதிச் சென்றதாகவும், அன்று முதல் படிப்பறிவு இல்லாத குமராண்டி புத்திசாலியாக மாறி, தீவிர  பக்தனாக மாறினார் என்றும் கூறப்படுகிறது.
  நாவன்மை மிக்கவராக மாறிய குமராண்டி, பிரம்மச்சரியம் காத்து, ஞானியார் பட்டம் பசுவாமிகள
  பல தீர்த்த யாத்திரைகள் மேற்கொண்டார்.
திருவிதாங்கூர் ராணியின் நோயை நீக்கியதால், அரச குடும்பம் சார்பில் தங்கத்தால் வேயப்பட்ட ருத்ராட்ச மாலை அவருக்கு வழங்கப்பட்டது. இந்த மாலை இன்றும் அவரது குருபூஜை அன்று சிவலிங்கத்திற்கு அணிவிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
எட்டயாபுரம் அரச பரம்பரையுடனும் ஞானியார் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.
அவர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் ஒரு சிவன் கோயில் கட்டப்பட்டது. அவர் சமாதியான இடத்தில் புற்று வளர்ந்து, அதன் அருகே வில்வச் செடியும் வளர்ந்ததாம். புற்றை அகற்றும் போது, சிறிய அளவிலான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதால், அங்கே சிவன் கோயில் கட்டப்பட்டது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாகத்திற்குப் பிறகு வரும் திருவோண நட்சத்திரத்தன்று குருபூஜை கொண்டாடப்படுகிறது.
  
அளவு குறையாத பதநீர் அதிசயம்: குமராண்டி ஞானியார் ஆண்டுதோறும் வைகாசி விசாகத்திற்கு திருச்செந்தூருக்கும், இதர வெள்ளிக் கிழமைகளில் மருங்கூர் முருகன் கோயிலுக்கும் செல்வது வழக்கமாம். ஒருமுறை சாத்தான்குளம் புதுக்குளம் அருகே பதநீர் கேட்டுள்ளார். குறைவான அளவே இருந்த பதநீரை இறக்கியவர் கொடுத்தபோது, பதநீர் குடிக்கக் குடிக்க அளவு குறையவே இல்லை. தற்போது அந்த இடம் "ஞானியார்குடியிருப்பு" என அழைக்கப்படுவதாகவும், ஈத்தாமொழி அருகே "குமராண்டி தருவை" என்ற ஊரும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முக்கியமான குறிப்பு:
"அம்மாசி தானான அரூபத்தாயே அகண்ட பரிபூரணியே யமலை சத்தி" என்ற பாடலை இயற்றியவர் இந்தப் குமராண்டி ஞானியார் சுவாமிகளாக இருக்கக்கூடும் என்று கருதுகிறேன் எனவே இந்தக் கட்டுரையை படிப்போர். இதில் உள்ள இடத்தின் பெயர்கள், ஞானியின் பெயர், அவர் ஜீவசமாதியான கோவில் ஊர், மற்றும் அவர் செய்த அதிசயங்கள் தற்போது அது எந்த ஊர் பகுதியில் உள்ளது. என அந்தப் பகுதியில் வசிப்பவர்கள், அல்லது அறிந்தவர்கள் உறுதி செய்து கமெண்டில் பதிவு செய்து உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நமக்கு நல்லதொரு பாடலை தந்த ஞானியை பற்றி அறிந்து கொள்ளவும் இயன்றால் அவரது ஜீவசமாதிக்குச் சென்று நன்றி சொல்லவும் இந்தக் கட்டுரை நன்றி, வணக்கம்.

ஆத்தியப்பரின் அதிசயம்

ஒரு அதிசயம்!ஆத்தியப்பர் வைத்தியராக மாறிய தருணம்: 

(அன்று 26/05/25) இரவு 10 மணி. வெளியே கொட்டும் மழை. ரயில் கிளம்ப இன்னும் சிறிது நேரமே இருந்தது. பதற்றத்துடன் ஒரு ஆட்டோவை நிறுத்தி, "ரயில் நிலையத்திற்கு சீக்கிரம் போக வேண்டும்! அவசரம்!" என்று கூறினேன்.
 ஆட்டோகாரர் ஒரு நொடி கூட தாமதிக்காமல், வேகமாக வாகனத்தைச் செலுத்தத் தொடங்கினார். சற்று இருண்ட சாலைகளில் ஆட்டோ பாய்ந்து சென்றது. திடீரென, மழைநீர் நிரம்பிய ஒரு பள்ளம்! அதை கவனிக்காத ஓட்டுனர், வேகத்தைக் குறைக்காமல் அதனுள் ஆட்டோவை செலுத்த, "சட்டென்று" ஆட்டோ உயரத் தூக்கி போட்டது. அடுத்த நொடி, நான் இருக்கையிலிருந்து ஓரடிக்கும் மேல் தூக்கி எறியப்பட்டு, "நச்" என்று அதே இடத்தில் வந்து விழுந்தேன். அவ்வளவுதான்! என் இடுப்பில் ஒரு சுருக்கென்ற வலி! என்னை அறியாமலேயே, "அம்மா!" என்ற அலறல் என் வாயிலிருந்து வெளிவந்தது. 

அந்த வலியுடனே என் ரயில் பயணத்தைத் தொடர்ந்தேன். இரவு முழுவதும் வலியாக இருந்தது. சிறுநீர் கழிக்க ரயில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கக் கூட முடியவில்லை. ஒவ்வொரு அசைவும் வலியைக் கூட்டியது. எப்படியோ பயணத்தை முடித்து ஊர் திரும்பினேன்.

 இரண்டு நாட்கள் கழித்து, மருத்துவரைச் சந்தித்தேன். அவர் "ஓம்னி ஜெல்" என்ற மருந்தை பரிந்துரைத்தார். அதைப் பயன்படுத்தியும் வலி தீரவில்லை. 

சில நாட்கள் கழித்து, எலும்பு முறிவு சரிசெய்யும் வைத்தியரிடம் சென்றேன். அவர், எனக்கு நரம்பு பிடித்துக்கொண்டதாகக் கூறி சிகிச்சை அளித்தார். ஆனாலும் வலி குறைந்தபாடில்லை.

 மேல்நாட்டு கழிவறையைப் பயன்படுத்தும் போது கூட வலியால் துடித்துப் போனேன்.

பின்பு 16/06/25 அன்று இரவு. நமது குலதெய்வக் கோவிலுக்குச் செல்ல வேண்டி ஒரு பேருந்துப் பயணம். பேருந்தின் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது கூட சிரமமாக இருந்தது. என் முதுகில் சுமந்து செல்லும் பையைத் தூக்க கூட முடியவில்லை. போகும் வழியெல்லாம் வேகத்தடைகள் வரும்போது என் இடுப்பில் ஒரு மின்சாரம் பாய்ந்தது போல் வலித்தது. ஒவ்வொரு வேகத்தடையும் என் பொறுமையைச் சோதித்தது. ஆனாலும், வலியைப் பொறுத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தேன்.

17/06/25 அன்று காலை, மதியம் இருவேளை பூஜைகளிலும் கலந்துகொண்டேன். பிறகு திருச்செந்தூர் சென்றேன். உடன்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியெல்லாம் வேகத்தடைகள் என்னை வாட்டி எடுத்தன. திருச்செந்தூரில் இரவு தங்கிவிட்டு,

 மறுநாள் 18/06/25 காலையில் திரும்பவும் நமது கோவிலுக்கு வந்தேன். வரும் வழியிலும் வேகத்தடைகள் என்னை வேதனைப் படுத்தியது. எப்படியோ கோவிலை அடைந்தேன்.

 காலை நடைதிறந்தவுடன் அனைத்து சன்னதிகளிலும் நமது தெய்வங்களை வணங்கினேன். ஆத்திசாமி சன்னதிக்கு வந்தபோது, ஒரு உள்ளுணர்வு என்னை உந்தியது. அங்கே காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்த காலணிகளை எடுத்து, என் வலி இருந்த இடத்தில் வைத்து, "ஆத்திசாமியே, என் வலி தீர வேண்டும்!" என்று கண்ணீருடன் வேண்டிக்கொண்டேன். பிறகு பூஜையிலும் கலந்துகொண்டேன்.

ஆத்திசாமி சன்னதியில் அண்ணாவியிடம், என் முகத்தில் தீர்த்தம் அடியுங்கள்" என்று கேட்டேன். அண்ணாவியும் ஆத்திசாமி பூஜை முடிந்ததும் தீர்த்தத்தை எடுத்து என் முகத்தில் மூன்று முறை எறிந்தார். அப்போதே என் உடலில் ஒரு சிலிர்ப்பு! விவரிக்க முடியாத ஒரு தெய்வீக உணர்வு! பிறகு அனைத்து சன்னதிகளிலும் பூஜைகள் முடிந்த பிறகு, சர்க்கரைப் பொங்கல் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, நான் தங்கியிருந்த அறையில் வந்து உறங்கினேன்.
மதிய பூஜைக்கு எழுந்தபோது, ஒரு அதிசயம்! என் வலி சற்று குறைந்திருப்பதை உணர்ந்தேன். இது வெறும் தற்செயல் நிகழ்வா, அல்லது ஆத்திசாமியின் அருளா? மதிய பூஜையில் கலந்துகொண்டு, மாலை சுமார் நான்கு மணி அளவில் ஊர் திரும்பத் தயாரானேன். என் முதுகில் சுமக்கும் பையைத் தூக்கி மாட்டினேன்... ஆச்சரியம்! எனக்கு எந்தவிதமான வலியும் தெரியவில்லை! இது எப்படி சாத்தியம்? அங்கிருந்து சுமார் 6 மணி நேரம் பேருந்துப் பயணத்தில் ஊர் வந்து சேர்ந்தேன். பேருந்தில் வரும்போது வேகத்தடைகள் வந்தன. ஆனால், எனக்கு எந்தவிதமான வலியையும் வேதனையையும் தரவில்லை! ஆனால், 
குனிந்து நிமிரும் போது மட்டும் வலி இருந்த இடத்தில் லேசான வலி போல் கூச்சம் இருந்தது.

நான் இன்று (21/06/25) இந்தப் பதிவை எழுதும் நேரம், எனக்கு எந்தவிதமான வலியும் இல்லை! வலியில்லாமல் குனிந்து நிமிர முடிகிறது. கழிவறையைப் பயன்படுத்த முடிகிறது. என்ன ஒரு ஆச்சரியம்! ஆத்தியப்பசாமி எனது வேண்டுகோளை ஏற்று உடனே சரி செய்து இருக்கிறார்! இந்தப் பதிவை எழுதும் போதே என் உடம்பில் ஒரு புல்லரிப்பு! நமது குலதெய்வத்தின் மகத்துவம் என்னை மிகவும் புளகாங்கிதம் அடையச் செய்துள்ளது. ஆத்தியப்பர், என் வலியைக் குணமாக்கி, என்னிடம் அதிசயம் செய்திருக்கிறார்!
"ஹரி ஓம் ராமானுஜய"
"அடியேன் தாசன்" ஆத்தியப்பன் S